×

போலீஸ் கமிஷனரின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் 14வது மாடியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை: விருகம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: விருகம்பாக்கத்தில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் நேற்று காலை குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகரில் அரசு உயர் அதிகாரிகளின் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் டெல்லியில் போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோராவிற்கு சொந்தமான வீடு உள்ளது.

 சஞ்சய் அரோரா தற்போது டெல்லியில் வசித்து வருவதால் அவரது வீட்டை தூத்துக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மதுசூதன ரெட்டி (69) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அதன்படி, மதுசூதன ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். இந்நிலையில், குடியிருப்பின் 14வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் வழக்கம் போல் மதுசூதன ரெட்டி நேற்று காலை நின்று கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் 14வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த மதுசூதன ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுசூதன ரெட்டி வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வீட்டின் பால்கனியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மதுசூதன ரெட்டி இறப்பு குறித்து முழு விவரங்களும் வெளியே வரும் என போலீசார் தெரிவித்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Virukambakkam , Police Commissioner, real estate tycoon suicide, Virugampakkam,
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...